Thursday, September 15, 2016

எங்கே போய்விடப்போகிறீர்கள் அப்பா?!

‘‘முகம் பாக்கிறவங்க, கடைசியா ஒருதரம் பாத்துக்கங்க...’’ என்று ஒலித்தது குரல்!
கண்ணம்மா பேட்டை மின் மயான மேடையில், உறங்கிக் கொண்டிருப்பதுபோலவே இருந்தது அப்பாவின் உடல்.
49 ஆண்டுகளாக எங்களோடு உறவாடிய அப்பாவை நான் பார்க்கும் கடைசி நொடி இது என்பதை உணர மறுத்தது மனம்.
மரணத்துக்குபிறகான அவரது முகத்தில் புது பூரிப்பு கவனித்தேன்.
அவரது மார்பு மீது சூடம் ஏற்றச் சொன்னார்கள்.இயந்திர கதியில் எல்லாம் நடந்தது.
குபீரென்று நெருப்பு பற்றிய நொடிகளில், அவரது உடல் இருந்த ட்ரே மெல்ல நகர்ந்தது.
நெருப்பு ஜ்வாலைகள் ஆக்ரோஷம் காட்டிய சிம்னிக்குள் அவர் பாதம் நுழைய, அதிலிருந்து என் முகத்தை திருப்பிக்கொண்டேன். வெள்ளரி பிஞ்சுபோல் மிருதுவான அந்த உடலை நெருப்பு தீண்டுவதை பார்க்கும் தைரியம் எனக்கில்லை.
‘‘காபி கொடுத்தாலே, தாத்தா சூடு தாங்க மாட்டாங்களேப்பா. அவங்கள போயி நெருப்புல வக்கிறீங்களேப்பா!. புதைக்க மாட்டாங்களாப்ப்ப்பா?’’ – என் கையை பிடித்து இழுத்து மகன் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் நின்றிருந்தேன்.
உடல் வைத்திருந்த பாடையை வெட்டி வீசியெறிந்தார்கள்.
‘‘ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி. அஸ்தி வாங்கிட்டு போங்க’’ என்றார்கள்.
ஆறடி உயரம், அசத்தும் உருவமாக எங்களுடன் வாழ்ந்து மகிழ்ந்து, மறைந்தவர், சில எலும்புகளும், கொஞ்சம் கரித்துகள்களுமாக கையடக்க மண் கலசத்தில் எங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டார்.
அவ்வளவுதானா வாழ்க்கை?
கண்கள் கலங்க, கனத்த இதயத்துடன் வங்கக் கடலில் கரைத்து திரும்பினோம்.
அப்பாவின் உருவத்தை இனி எங்கும் காண முடியாது. அவரின் ஞாபகங்கள் மட்டுமே மனதில் நிற்கும்.
உணவு அருந்த, மாத்திரை விழுங்க, மூச்சுவிட, இரண்டு தினங்களாகவே அப்பா சிரமப்பட தொடங்கினார். மருத்துவரை சந்திக்க 5 மணிக்கு அப்பாயின்மென்ட். மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து மருத்துவமனை கிளம்ப வேண்டும். கார் வந்தது. சேரில் அமர்ந்திருந்தவர், எழுந்து நடந்து வீட்டு வாயில்படியில் நின்றார். காலில் செருப்பு மாட்டிக் கொண்டு கிளம்ப வேண்டும். செருப்புக்குள் கால்களை நுழைத்த நொடிகளில் கண்கள் நிலை குத்தி நொடிப்பொழுதில் உயிர் பிரிந்து சரிந்தார்.
‘‘80 வயது தாண்டியவர். இது கல்யாண சாவு. கொண்டாட வேண்டும். அழக்கூடாது’’ என்றார்கள் சிலர்.
‘‘80க்கு மேல குழந்தைபோல் ஆகிவிட்டார். இனி பிறப்பு கிடையாது. முழுமையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்’’ என்றார்கள் சிலர்.
‘‘நோயில் படுக்காமல், நொடியில் மரணம். நல்ல சாவு’’ என்றார்கள் சிலர்.
அப்பா அதிகம் ஆசையற்றவர். அவரின் அதிகபட்ச ஆசையே ஒரு டம்ளர் காபியும். கொஞ்சம் இனிப்பும்தான். காரம் தவிர்ப்பார்.
வெந்நீர் குளியலோ, காபி அருந்தும்போதோ சூடு தாங்க மாட்டார். பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் மனதார வாழ்த்துவார்.
‘கடவுளே கதி’ என வாழ்ந்தவர். இறைவன் அளிக்கும் ஆயுள் வரைக்கும் ‘நோயற்ற வாழ்வு’ வேண்டினார். அவர் விரும்பியதே, அவர் வாழ்வில் நடந்தது. இனி அவர் வாழ்த்தியது நடக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
வெள்ளரிப்பழம், தனது கொடியில் இருந்து விடுபடுவதுபோல, மலர்ந்த மலர்கள் செடியில் இருந்து உதிர்வதுபோல, தனது உடலில் இருந்து அவரது ஆன்மா விடுபட்டுக்கொண்டது.
இப்போது எல்லா திசைகளிலும் அப்பாவின் அசைவுகள் தெரிகிறது. அவ்வப்போது அவரின் குரல் ஒலிக்கிறது. திடீர், திடீரென அவரது நினைவுகள் வாட்டுகிறது.
எங்கே போய்விடப்போகிறீர்கள் அப்பா?!
சிறு எறும்பாகவோ, கருங் காகமாகவோ, பாட்டுக் குயிலாகவோ எங்காவது, ஏதாவது ஒரு உயிரினமாக பிறந்திருப்பீர்கள், பிறக்கப்போகிறீர்கள்.
‘இதோ அருகில் இருக்கிறீர்கள்’ என்ற உணர்வே எங்களுக்கு இன்னும் அதிக பிணைப்பை தந்திருக்கிறது.
அன்பும் அறனுமாய் வாழ்ந்த உங்கள் வாழ்க்கை நினைவுகளே எங்கள் ஆஸ்தி!

Wednesday, July 13, 2016


அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதுமில்லை!

பூபதி இன்று அலுவலகம் வரவில்லை. அவர் உணவு உண்ணும் மதியம் 3 மணி சுமாருக்கு, எங்கிருந்தோ வரும் காகங்கள், தலையை அங்கும், இங்குமாக திருப்பி, திருப்பி பார்த்தபடி ஆங்காங்கே அமர்ந்து காத்திருக்கும். கரைந்திருக்கும்.
வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் உணவை கொஞ்சமாக எடுத்து தயிர் விட்டு குழந்தைக்கு பிசைவது போல பிசைந்து, அதை நாலைந்து பாகங்களாக பிரித்து ஆங்காங்கே மொட்டை மாடி கைபிடி சுவரில் வைப்பார் பூபதி.
தயிர் சாதம் வைத்த நொடியில் மின்னல் வேகத்தில் பறந்து வரும் காகங்கள் அவற்றை லாவகமாக கவ்வி திண்ணும். முதலில் குஞ்சுகளுக்கு எடுத்து செல்லும் காகங்கள் சாதத்தை தன் அலகால் கவ்வி, தொண்டை வரை சேர்த்து எடுத்துச் செல்லும். அதன்பின் ஓரளவு பறக்கத் தெரிந்து தானே உண்ணத் தெரிந்த குஞ்சுகள் உண்ணும். அதன்பின் மிச்சமிருக்கும் உணவை சீனியர் காகங்கள் உண்ணும். இடையே வில்லன்போல உடல் முழுவதும் கருத்த அண்டங்காக்கைகள் வந்துவிட்டால், மற்ற சாம்பல் நிற காகங்கள் அச்சத்துடன் விலகி வழிவிடும். அது மிச்சம் வைத்ததால்தான் மற்ற காகங்களுக்கு உண்டு.
காகங்கள் உண்டு களித்து சென்றதும், மிச்சமிருக்கும் பருக்கைகளை தொலைவில் நின்று கொண்டிருக்கும் புறாக்கள் வந்து உண்ணும். அவை சென்றபின், சிதறி கவனிப்பாரற்று கிடக்கும் பருக்கைகள் அணில்கள் வயிற்றை நிரப்பும்.
அலுவலகத்தின் மொட்டை மாடியில் நாங்கள் அன்றாடம் கண்டு மகிழும் காட்சிகள் இவை.
பூபதி இன்று அலுவலகம் வரவில்லை. ஆனால் காகங்கள் வந்துவிட்டன. அரைமணி நேரமாக அவை அங்குமிங்கும் அலைபாய்ந்தன. மதிய உணவை வீட்டிலேயே முடித்துவிட்டு நான் காபி மட்டும் எடுத்து வந்திருந்ததால் கையில் உணவில்லை. ஞாபகம் இருந்திருந்தால் வீட்டில் இருந்து கொஞ்சம் தயிர் சாதம் கொண்டு வந்து வைத்திருக்கலாமே என்று மனம் மறுபடி, மறுபடி கூவிக்கொண்டிருந்தது.
நல்லவேளையாக, பெஞ்சமின் உணவு டப்பாக்களோடு அங்கு வந்தார். அவரும் பல நாட்கள் காகங்களுக்கு உணவிடுவார். எப்போதும் மதிய உணவு முடித்து அலுவலகம் வருபவர் இன்று கையில் எடுத்து வந்திருந்தார். பாதி உணவை எடுத்துக் கொண்டு கைபிடிச் சுவரில் வைத்தார். காகங்கள் கும்பலாக பாய்ந்து தின்று தீர்த்தன. என் மனம் குளிர்ந்தது.
‘‘சார், நீங்கள் இந்த உணவளிக்கவில்லையென்றால் காகங்கள் இன்று கஷ்டபட்டுருக்குமே’’ என்றேன்.
‘‘வானில் வட்டமிடும் பறவைகளை பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை. அறுப்பதும் இல்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. ஆனால்,  ஆண்டவன் அவற்றுக்கு சரியான வேளையில் உணவு அளித்துவிடுகிறான்’’ என்று பைபிள்லயே சொல்லிருக்கு சார். பறவைகளுக்கு எப்படியாவது உணவு கிடைச்சிரும் சார் – என்றார் பெஞ்சமின்.
என் மனம் திடீரென ஜில்லிட்டது. பசியால் வாடும் உயிர்கள் பற்றி இனி கவலை கொள்ள தேவையில்லை. படைத்தவன் இருக்கிறான் பார்த்துக் கொள்வான்.
பூபதிக்குப் பதில் பெஞ்சமினை இன்று ஆண்டவன் பணித்திருக்கிறான்!   

Monday, June 27, 2016

பறவைகளோடு என் காதல்!

பழகி, பாசத்தால் பிணைந்த மனிதர்களைப் பிரிவது போலதான் இருக்கிறது வாழ்ந்து மகிழ்ந்த வீட்டையும், பிறந்து சுற்றித் திரிந்த ஊரையும் பிரிவது.
புது வீடு மாறி 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் சுவர்களுக்குள் ஒட்டவில்லை வாழ்க்கை. வீட்டை தொட்டுச் செல்லும் ரயில்கள் இன்னமும் மனசுக்குள் மகிழ்ச்சி தருகின்றன. அதே மேற்கு மாம்பலம்தான் என்றாலும், அருகில் வேறுவேறு முகங்கள், குணங்கள்.
புது இடங்களை பழகுவதைவிட, புது முகங்களை புரிந்து கொள்வதும், அவர்களோடு பழகுவதும் கடினமாக இருக்கிறது. அதனால்தான் ‘காக்கை, குருவி என் ஜாதி’ என பெரும்பாலும் நீல வானோடும், பசுமையோடும் காதல் கொள்கிறேன்.
பணிச்சூழல் காரணமாகவும், பணத் தேவைகளுக்காகவும் பிறந்த ஊரை விட்டு வேறு நகரம், வேறு நாடு செல்பவர்களுக்கு மிகவும் மனத்துணிவு வேண்டும்.
அப்படித்தான் பிறந்த மதுரையை பிரிந்து நான் சென்னை வந்ததும் இதயம் தொலைத்து இயங்கிக் கொண்டிருந்தேன். இன்னமும்கூட நீண்ட நாள் மதுரையில் இருந்து மனதை பிரிக்க இயலவில்லை.
ரயில் பயணங்களில் மதுரை நோக்கி செல்லும் நாட்கள் மனசுக்குள் குளிரடிக்கும். வைகை நதி பாலத்தை ரயில் கடக்கும்போது மீனாட்சி கோபுரம் தெரிய தொடங்கியதும் மதுரை நினைவுகள் மனசுக்குள் தட,தடவென வேகம் பிடிக்கும். நாயக்கர் புதுத்தெரு, மேலமாசிவீதி வாழ்க்கையின் ஞாபகங்கள் அலைமோதும்.
இப்போதும்கூட, கோரிப்பாளையம் விசாலம் காபியின் சுவை சென்னையில் எங்காவது தட்டுப்படாதா என கால்கள் அலைந்து திரியும்.   
மதுரையில் இருந்து கிளம்பி 1993ன் தொடக்கத்தில் கோயமுத்துார் சென்றபோது புள்ளி வைத்தது போன்ற சிறு பிரிவு மனதில் இருந்தது. கோயமுத்துார் மக்களின் ஈரம் கசிந்த இனிய நட்பும், இனிப்பான சிறுவாணி நீரும், ஜிலு,ஜிலு பாலக்காடு கணவாய் காற்றும் அந்த பிரிவு துயரை துடைத்தது. மிக,மிக குறுகிய என் நட்பு வட்டத்துக்குள் மிகுதியாய் இருப்பது கோயமுத்துார் அன்பர்களே!
ஆசை,ஆசையாய் ருசிபார்க்கும் ஒரு குழந்தையின் கையில் இருக்கும் மிட்டாயை, படீர் என பிடுங்கியதும் அது முகத்தில் தெரியும் குபீர் அதிர்ச்சிபோல இருக்கிறது பழகிய இடத்தையும், வீட்டையும் விட்டுப்போவது.
அவர்களுக்கு அது வெறும் கட்டடம். வேறு மனிதர்கள் வருவார்கள், போவார்கள், தங்குவார்கள்.
மனதால் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அது சுவாசம் என்று!
புது வீடு அருகே நிறைய காகங்கள், கொஞ்சம் குயில்கள், வாசலில் எப்போதும் 2 பசுக்கள், அதன் கன்றுகள். ரயில் பாதையை ஒட்டி இருப்பதால் எப்போதும் விசாலமான வெளிப்புறம், குபீர் என கதவை தள்ளிக்கொண்டு வரும் காற்று. பேச்சுத் துணைக்கு இருப்பதுபோல எப்போதும் ரயில்களின் ஓசை. அருகில்  இருக்கும் 7 குடும்பங்களைவிட இவைகளுடன் அதிகம் ஒட்டிக்கொண்டிருக்கிறோம்.    

Friday, June 24, 2016

மனம் ஒரு சிறகானது

இன்று காலையில் மனதின் சிறகுகள் மீது பெரும் பாறாங்கற்கள் வைத்தது போன்ற அழுத்தம், வலி.
நெஞ்சம் கலங்கி நின்ற வேளையில், முதலில் கோவை முனைவர் ஸ்ரீ ஜெகநாத சுவாமியிடம் இருந்து அலைபேசி அழைப்பு.
அபிராமி அந்தாதி தொடரின் நிறைவு பகுதி குறித்து நிறைய பேசினார். அதில் பொதிந்திருந்த ஸ்ரீவித்யா மார்க்கம் குறித்த ஆய்வு விளக்கினார்.
கன்றுகளின் பசியாற, பசுவின் மடியில் இருந்து சுதந்திரமாக விடுபடும் பால் அடுப்பிலிடப்படும்போது அலறி துடிக்கும். அதன்பின் தயிர், வெண்ணை, நெய்யாக பாடாய்படுத்தப்பட்டு இறுதியில் ஹோமத்தில்
நெய் உருவில் கரையும்போது தேவியின் திருவடிகளை சரணடையும் பேரானந்தம் நிகழ்கிறது என்று சுவாமிகள் எழுதிய வரிகளை விவரித்தேன்.
இதுபோல்தான் மனிதனும் கஷ்டங்களின் இறுதியில் இறைவனுக்கு இஷ்டமுடையவனாகிறான் என்பதை இன்றைய பகல் எனக்கு நினைவுபடுத்தியது.
அடுத்த அழைப்பு எழுத்தாளர் திருமிகு ராஜேஷ்குமாரிடம் இருந்து. அப்பா எப்படி இருக்காங்க? உங்கள் பதிவு மனதை உருக்கியது என்றவர் தொடர்ந்து மனம்விட்டு பேசினார்.அலைபேசியில் அப்பாவிடமே அவரை பேச வைத்தேன்.
நேரிலும், எழுத்திலும், பேச்சிலும் பளிச்சிடும் அவரது இளமையின் ரகசியத்தையும் முதன்முறையாக சொன்னார்.
இருபெரும் மனிதநேய மாமனிதர்களின் பேச்சால் இன்றைய பொழுது இனிதானது. மனம் ஒரு சிறகானது.

Saturday, June 4, 2016

நன்றி இறைவா... நன்றி ராஜா...

அம்மா - அப்பாவை எங்காவது அமைதியான, இனிமையான சூழலுக்கு அழைத்து சென்று வர வேண்டும் நண்பர்களிடம் சில வாரங்களாக சொல்லி கொண்டிருந்தேன்.
ஏதோ மனசுக்கு தோன்றியது...
வயதின் காரணமாக அவர்களுக்கு வீட்டை விட்டு, ஏன் அறையை விட்டு கூட வெளியே வர பயம்.
வீட்டுகுள்ளேயே இருக்கிறார்களே என்று எனக்கு வருத்தம்.
கடற்கரையிலேயோ, பூங்காவிலேயோ, கோவிலிலேயோ கொஞ்சம் காலார, மனதார நடந்து சந்தோஷபடட்டுமே என நினைத்துகொண்டிருந்த வேளையில், 2 வாரத்துக்கு முன், அவரது அறையிலேயே சட்டெனெ தடுமாறி கீழே விழுந்துவிட்டார் அப்பா.
தலையில் அடிபட்டதில் மூளையில் ரத்த கட்டு. 2 நாள் ஆஸ்பத்திரி observation க்கு பிறகு வீடு திரும்பி ஓய்வு எடுக்கிறார்.
இன்னும் ஒருவாரம் கழித்து 3 வதாக எடுக்கப்பட இருக்கும் CT Brain Scan தான் surgery தேவையா, இல்லையா என்பதை சொல்லும் என்பதால் 2 வாரங்களாக பதை,பதைப்புடன் கழிகிறது வாழ்க்கை.
86 வயசில இப்படி சிரமபடுறது மனசுக்கு கஷ்டமா இருக்கு... என்றபடி அவர் சுவாமி படங்களையும், எங்களையும் பார்த்து கும்பிடுவதை பார்த்தால் மனம் வலிக்கிறது.
அவரிடமே சொன்னேன், மனிதனை மனிதன் வணக்க கூடாது. இறைவனை மட்டும் வணங்குங்கள். அவர் நல்லதே செய்வார் ...
மகனுக்கு தொல்லை தருகிறோமே என்ற வருத்தம் அவருக்கும், வயதானவர்களுக்கான வாழ்க்கை சூழலை ஏற்படுத்தி தர முடியவில்லையே என்ற வலி எனக்குமாக தொடர்கிறது.
வெறும் உணவிடுவதும், உடை தருவதும், ஒன்றாக வாழ்வது மட்டும்தான் கவனிப்பா?
அப்பாவை ஆஸ்பத்திரி அழைத்து போன போது தான் கவனித்தேன்...
60 வயது கடந்தவர்களில் பலர், நிரிழிவு, டயாலசிஸ், ஸ்ட்ரோக், மூட்டு தேய்மானம் என வித, விதமான வியாதிகளுடன் வாழ்கிறார்கள்...
அவர்களிடம் ஆயுள் மட்டும்தான் இருக்கிறது வாழ்வில் ஆனந்தம் இல்லை...
வயது மட்டும்தான் அதிகரித்திருகிறது வசந்தம் இல்லை...
பணம் வைத்திருப்பவர்களுக்கு சிகிச்சையாவது கிடைத்து விடுகிறது. அதுவும் இல்லாதவர்கள் நோயுடனும், வலியுடனும் வாழ பழகி கொள்கிறார்கள்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவ நிபுணர் திரு. லக்ஷ்மி நரசிம்மன் அன்பு கிடைத்தது பெரும் தவம்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி அப்பாவை அன்பாக கவனித்து கொள்கிறார்...
மதுரை டாக்டர் கனியரசு ஒவ்வொரு இரவிலும் அப்பாவின் உடல் நலம் வாட்ஸ்அப்பில் விசாரித்து நம்பிக்கையூட்டுகிறார்...
ஆசையற்று இருப்பவன்கூட வாழ்வின் இறுதிநாட்கள் வலியின்றி கழியவேண்டும் என்று பேராசை வைத்திருப்பான்...
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நரம்பியல் அறுவை சிகிச்சை வார்டில், அறுவை சிகிச்சை அடையாளங்களுடன் படுத்து இருக்கும் ஏதும் அறியா மழலைகள் முகத்தில் ஒரு மின்னல் புன்னகை பார்த்து அதிசயித்தேன்.
வாழ்கையை இப்படிதான் எதிர்நோக்கவேண்டும் என்ற சூத்திரம் புரிந்தது.
ராஜாவின் இசையால் மனதை நிரப்பி தூங்க சென்ற இரவுகள் பலநாட்களாக தொலைந்து போய் இன்றைக்கு திரும்ப கிடைத்து இருக்கிறது.
குழந்தைகளிடம் இருந்து ஒரு உண்மையும், ராஜாவின் இசையில் இருந்து கொஞ்சம் இனிமையும் கிடைத்தது...
நன்றி இறைவா... நன்றி ராஜா...

Tuesday, February 16, 2016

இதோ புது ஆண்டு பிறக்க போகிறது...
செரிமான கோளாறு - அசிடிடியில் அடிக்கடி அவதியுறும் என்னிடம் ஒரு முறை அலுவலகம் வந்திருந்த டாக்டர் சுதா சேஷையன் சொன்னார்:
நீங்க ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து கட, கட வென குடிக்காமல், மிகவும் மெதுவாக ஒவ்வொரு மடக்காக குடியுங்கள். ஒவ்வொரு மடக்கு தண்ணீரும் உங்கள் உள் உறுப்புகளை தொட்டு சில்லிட்டு பயணிப்பதை உணரலாம்...
அடுத்த சில மணி நேரத்தில் அதை பின்பற்றினேன். மனம் பரவசமானது. தண்ணீர் கூட அதிக சுவை தெரிந்தது ...
/அம்மா சுட்டு தந்த பணியாரத்தில் பரவி கிடக்கும் தேங்காய் சில்லுகளும், கடலை பருப்பையும் தேடி ருசிக்கும் போது அதன் சுவை அலாதிதான் ...
/ சுவாசத்தின் போது, தூய காற்றை நிதானமாக, உள்ளிழுக்கும் போது உறுப்புகளின் அசைவை உணரும் தருணங்கள் சுகமானவை...
இப்படி செயல்கள் எதுவாயினும் அதன் வழி மனதை செலுத்தினால் அந்த நொடிகளில் வாழ்க்கை ரசனையாகதான் இருக்கிறது..
காலத்தின் வயது் அதிகரித்து, இதோ புது ஆண்டு பிறக்க போகிறது...
பல ஆண்டுகளாய் நினைத்து பட்டியல் போட்டவைகளை 2016-ல் ஆவது பின்பற்ற வேண்டும்...
அதில் முதலாவதாக, அன்றாட அவசிய செயல்களை பட்டியலிட்டு, தேவையற்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருந்தாலே வாழ்கை சுவையாகும்...
சரவணபவன்ல காபி குடிப்பதை கட் பண்ணனும்...
வாரத்தில் ஒரு நாளாவது மெரீனாவில் காற்று வாங்கணும்...
கோப வார்த்தைகளை குழி தோண்டி புதைக்கணும்...
என இன்னும் பல பட்டியல் 2016க்காக காத்திருகிறது...
goodbye 2015
13 வயது இருக்கும்...
ஒரு நாள்,, டிரசிங் டேபிளில் இருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்றிருந்த
என் மகள், ‘அப்பா வளர்ந்துகிட்டே இருக்கேன். என் சிறு வயது போகின்றது.
வளர, வளர நிறைய பிரச்னைகளை சந்திக்கணும்...’ என்றாள்.

வளர்ச்சியின் மகிழ்ச்சியும், மழலை பருவம் கரைந்து போகும் ஏக்கமும் கலந்து அவளது
முகத்தில் பிரதிபலித்ததை உணர்ந்தேன்...
அவளின் 5 வயதில், உறங்குகின்ற பொழுதில் அவளது பிஞ்சு கரங்கள் என் கரங்களுக்குள் சிறைபட்டு இருக்கும். அந்த மிருதுவான ஸ்பரிசத்தில் இருவரும் உறங்கிப்போவோம்.
பருவ மாற்றங்கள், ஒரு தந்தையையும், மகளையும் பக்குவமாய் பிரித்தது... அந்த பிஞ்சு ஸ்பரிசங்களை இப்போதும் என் விரல்கள் தேடும். ஆனால், காலம் அவளை இப்போது கல்லூரிக்கு அனுப்பி இருக்கிறது.
எட்டு மாதத்திலேயே அவசர பிரசவம். இரண்டு கைகளுக்குள் அடக்கிவிடும் அளவுக்கு எடை குறைவாக, அணில் குட்டி போல பிறந்த அக்னி குஞ்சு அவன்.
5 வயது வரை பேச்சும், எழுத்தும் வரவில்லை. விழிகளில் துறுதுறுப்பு. செயல்களில் விறுவிறுப்பு. பென்சில், பேனா, கிரையான்ஸ் என எது கிடைத்தாலும் சுவர் முழுவதும் கிறுக்கி, கிறுக்கி வீட்டையே அழகாக்கினான் என் மகன்.
அதன்பிறகு ஒரு நாள் திடீரென வட்டம் போட ஆரம்பித்தான். எப்போது வரையத் தொடங்கினான் என தெரியாது பார்க்கும் உருவங்களை லாவகமாக அவன் விரல்கள் வண்ணம் தீட்டும்.
பூனை, நாய், பறவைகள், யானை பொம்மை, ரயில் இன்ஜின் என எதை பார்த்தாலும் அது என்ன ஏன், எப்படி என்ற கேள்வி அவனிடம் இருந்து பிறந்து கொண்டே இருக்கும். அவன் வரைந்து குவித்த ஓவிய மூட்டைகளை பத்திரபடுத்த முடியாமல் போனது.
டிசல் இன்ஜின், ரயில் பெட்டிகள், டைனோசர், பிரிடேட்டர், ரிமோட் கார்ஸ் பொம்மைகள்,
கிரிக்கெட் மட்டைகள், கால்பந்துகள், ரூபிக்ஸ் கியூப்கள் என எப்போதும் அவன் கரங்களில் தவழும்.
திடீர், திடீரென அவன் மனதின் வேகத்துக்கு அவை உருமாறும். நிறம் மாறும். அதன்பின் விதவிதமாக
மீன்கள் பற்றிய ஆராய்ச்சி. அலிகேட்டர், ஏஞ்சல்ஸ், புளோரான், பைட்டர்ஸ் என வீட்டு
மீன் தொட்டியில் விதவிதமான மீன்களின் படையெடுப்பு. அடுத்த தெருவில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு
21 கியர் வைத்த சைக்கிள். அதில் வேகமாய் படபடக்கும் பயணம்...
அப்பப்பா... ஒரு பொழுதில் அவன் ஆசைகள் தணிந்தன.
‘சயின்ஸ் குருப் வேண்டாம். நான், சினிமால டைரக்டர் ஆகப்போறேன்’ என்ற வார்த்தை உதிர்த்த நாளில்
அவனது பால்யம் தொலைந்ததாக உணர்ந்தேன்...
அரும்பு மீசைகள் எட்டிப்பார்க்கும் அவன் 2017ல் கல்லூரியில் கால் பதிக்க வேண்டும்...
இப்படியாக, 2015 ஆம் ஆண்டு என் குழந்தைகள் வாழ்வில் புதிய அடையாளங்களையும்,
இனி, அவர்களே முடிவுகள் எடுப்பார்கள். நாம், அதற்கான நல் வழியை மட்டும் காட்டவேண்டும் என்ற
புரிதல்களையும் தந்திருக்கிறது.
பேச்சுகளைவிட, மவுனங்களே பல சமயங்களில் சிறந்த தீர்வுகளை தந்திருக்கிறது...
அனேகமாக 2016ல் பேச்சு, எழுத்தை விட மவுனமே எனது மொழியாக இருக்கும். இன்னும் சில பதிவுகளுடன் முகநூலும் அன்னியமாக இருக்கும் என நினைக்கிறேன்...
goodbye 2015